தொகுப்பு | நவம்பர், 2011

கண்ணோட்டம் – திருக்குறள்

16 நவ்

1. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு.

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
571

2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார்
உன்மை நிலக்குப் பொறை.

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.
572

3. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்: கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்?

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?
573

4. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணேட்டம் இல்லாத கண்?

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?
574

5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
575

6. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.

கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.
576

7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர், கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.
577

8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.
578

9. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை.

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
579

10. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

Advertisements