ஆண்டர்ஸ் பிரெய்விக்கும், சு.சுவாமியும்!

8 ஆக

படையப்பா படத்தில் ஒரு காட்சி: ஆற்றோரம் படித்துறையில் அமர்ந்து, தனது நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் ரஜினி. தமது காதலி எப்படிப்பட்டவள் என்பதை, பெண்களுக்குரிய 3 இலக்கணங்களை(?) "சாத்விகம், பிரச்சோதகம், பயானகம்" எனச் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பார். கூட இருக்கும் நண்பர், பார்வையாளர்களைப் போலவே கடுப்பாகி "என்ன சாச்சகம் பச்சோசகம்" என்பார். உடனே ரஜினிக்கு கோபம் வந்து விடும். "இது சமஸ்கிருதம்…தேவ லிபி….சரியா உச்சரிக்கனும்" என்று எச்சரிக்கை விடுப்பார். அப்படியானால் தமிழ் என்ன "நீச பாஷையா?" உனது விருப்பத்திற்கு உச்சரிக்க என்று மானமுள்ள தமிழர்கள் காலில் கிடந்ததைக் கழற்றி இருந்தால், "நீ பேசும் தமிழ் அழகு" என்ற பாட்டுக்கு தேவை இருந்திருக்காது.

இவரைப் போலவே, தான் பேசும் தமிழ் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஆள் சு.சுவாமி (அதாங்க.. சுப்பிரமணியன் சுவாமி. சுப்பிரமணியன் என்பதற்கு நேர்ப் பொருள் தெரியுமா? "பிராமணர்க்கு நல்லவன்". "பிராமணீயத்திற்கு நல்லவன்" என்று நாம் பொருத்தமாகக் கருதிக் கொள்வோம்).

 

vhp-leader-ashok-singhal-061209120825

பெயருக்கு ஏற்ற வேலையை கனகச்சிதமாக செய்து வரும் இந்த அம்பி, அண்மையில் டிஎன்ஏ (டெய்லி நியூஸ் அண்டு அனாலிசிஸ்) என்ற நாளிதழில் நடுப்பக்க கட்டுரை எழுதியிருந்தார். மும்பை தொடர் குண்டுவெடிப்பை அடுத்து எழுதப்பட்டிருந்த இந்த கட்டுரையை, ஒரு வரியில் கூறுவது என்றால் ஆர்எஸ்எஸ் துண்டுப் பிரசுரம் எனலாம். இஸ்லாமிய பயங்கரவாதத்தை துடைத்தெறிவது எப்படி? (How to wipe out Islamic terror?) என்ற அந்தக் கட்டுரை, மும்பை தொடர் குண்டுவெடிப்பிற்கு காரணம் இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான் என்று முடிவு கட்டுகிறது. சரி, அவர்களை ஒடுக்குவதற்கு அந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த வழிதான் என்ன? ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை (பிரிவு 371) பறிக்க வேண்டும்; வாரணாசியில் (காசி) உள்ள ஞானவபி (ஞானம் ஊறும் கிணறு) மசூதியை இடித்துவிட்டு காசி விசுவநாதர் கோவில் கட்ட வேண்டு்ம்; இதுபோல நாடு முழுவதும் கோவில் தலங்களில் உள்ள 300 மசூதிகளை அகற்ற வேண்டும்; தங்கள் மூதாதையர்கள் ஹிந்துக்களதான் என்பதை பெருமிதத்துடன் ஒப்புக் கொள்ளாத முஸ்லிம்களின் வாக்குரிமையப் பறித்து, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும்; இந்தியாவை (அதாவது மதச்சார்பற்ற குடியரசு என இருப்பதை), இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும்… என ஆர்எஸ்எஸ்சின் கொள்கைத் திட்டங்களை உள்ளடக்கி பட்டியல் நீள்கிறது. இதுதான் "பிராமணீயத்திற்கு நல்லவன்" பரிந்துரைக்கும் வழி.

அறிவு, நாணயம் துளியாவது அந்த நாளிதழுக்கு இருந்திருந்தால் சு.சுவாமியின் கட்டுரை பதிப்பிக்கப்பட்டிருக்காது என்பது ஒருபுறமிருக்கட்டும். அறிவு நாணயமுள்ளவர்கள் சிந்தித்துப் பாருங்கள், இந்தியாவில் "இஸ்லாமிய தீவிரவாதத்தை" உருவாக்கி வளர்த்து விட்டிருப்பது இத்தகைய எண்ணமும், இதுபோன்ற சொல்லும், இதை நடைமுறைப்படுத்த முனையும் செயல்களும்தானே! (சு.சுவாமி கட்டுரைக்கு எதிர்வினையாற்றியிருந்த டிஎன்ஏ வாசகர்களில் சிலர் அவரை இந்துத் தாலிபான் என மிகப் பொருத்த வர்ணித்திருந்தனர்).

தீயை அணைப்பதற்கு வழி சொல்கிறேன் என்ற பெயரில், எரிகிற நெருப்பி்ல் எண்ணையை ஊற்றுங்கள் என்கிறார் சு.சுவாமி. ஏன் அவர் அப்படிச் சொல்ல வேண்டும்? இந்து நடுத்தர வர்க்க உளவியலை நஞ்சாக்கி, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம்தான். இத்தகைய குண்டுவெடிப்புகளின் மூலம் ஆதாயம் அடையும் சக்திகள், நெருப்பின் வேகம் எதிர்பார்த்த அளவில் இல்லாதபோது அதை ஊதிப்பெருக்க நினைப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. உண்மையிலேயே மும்பை தொடர் குண்டுவெடிப்பை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருந்தால் அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டிய இடமும் இதுதான்: இந்துத்வா பயங்கரவாதிகள் அதிகாரத்தை அடைய குண்டுவெடிப்புகள் பாதை சமைத்து தருகின்றன. பாபர் மசூதி இடிப்புக்கு முன், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் என இந்திய வரலாற்றைப் பகுத்துப் பாருங்கள். உண்மை எளிதில் விளங்கும். 

சரி, மும்பை குண்டுவெடிப்புக்கு "இஸ்லாமிய பயங்கரவாதிகள்"தான் காரணம் என சு.சுவாமி முடிவுக்கு வந்தது எப்படி? ஏன் காவி பயங்கரவாதிகளோ அல்லது இந்துத்வா பயங்கரவாதிகளோ இதற்கு காரணமாக இருக்க முடியாதா? இந்தக் கேள்வி ஞாயமற்றது (நியாயமற்றது) என யாரும் ஒதுக்கிவிட முடியாது என்பதைத்தான் நார்வே பயங்கரவாதத் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.

நார்வேயில் நடந்தது என்ன?

Smiling youngsters listen to a speech during the Norwegian Labour Party youth camp on Utoya Island, just 24 hours before gunman Anders Breivik shot dead 68

2011 ஜூலை 22-ம் நாள் மாலை. நார்வே தலைநகர் ஆஸ்லோவிற்கு வெளியே அமைந்துள்ள உட்டோயா தீவில் அந்நாட்டு இளையர்கள் அரசியல் பயில்வதற்காக ஆர்வத்துடன் கூடியிருந்தனர். அது ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாம். திடீரென காவல்துறையினர் உடையில் புகுந்த வெறியன் ஒருவன் எந்திரத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக, தலைநகர் ஆஸ்லோவில் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே கார் குண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

The blast in Oslo was outside a government office

Seven people were killed in the Oslo bomb blast

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நார்வேயில் அதிகளவில் உயிர்களைப் பலி கொண்ட இந்த இரட்டை தாக்குதலுக்கு காரணம், அல்கொய்தா அல்லது ஏதோ ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புதான் காரணம் என உலகின் முன்னணி ஊடகங்களே செய்தி வெளியிட்டன. நபிகள் நாயகத்தை கேலி செய்து சித்திரம் வெளியிட்ட அண்டை நாட்டு டென்மார்க் பத்திரிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

ஆனால், இவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வண்ணம், பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது ஆண்டர்ஸ் பெரிங் பிரெய்விக் என்ற வலதுசாரி தீவிரவாதி என்றும், அவன் கிறிஸ்தவ மத நிறுவனத்தின் ஊழியன் என்பதும் (Anders Behring Breivik is a member of the John lodge St. Olaus TD Three pillars of the Norwegian Masonic Order. He has the status of the 3rd degree, where the highest order is the 10th degree) பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

Anders Behring Breivik

இவன் இந்த கொலைபாதகச் செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் 1,518 பக்கங்கள் கொண்ட கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளான். அதில் அவன் சு.சுவாமி வகையறாக்களை 102 பக்கங்களில் புகழ்ந்து தள்ளியிருப்பதுதான் இங்கு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விசயம். இதுபற்றி தி இந்து நாளிதழில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம்:

 

"

 

மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்த
நார்வே கொலைகாரன்
இந்துத்வாவிற்கு பாராட்டு!

புது டெல்லி, ஜூலை 26, 2011

இந்தியாவின் ‘இந்துத்வா’வாதிகளின் குறிக்கோள்கள்,
சிலுவைப் போர் வீரர்களுடன் ஒத்திருப்பதாகக் கூறுகிறான்
ஆண்டர்ஸ் பிரெய்விக்

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக அரசுகளை வீழ்த்துவதற்கான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் இந்துத்வா இயக்கம் முக்கியமான கூட்டாளி என பாராட்டியுள்ளான், மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்த நார்வே கொலைகாரன் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்.

(அவன் இணையத்தின் மூலம் வெளியிட்ட) "2080: ஒரு ஐரோப்பிய விடுதலை அறிவிப்பு" ஆனது, பயங்கரவாதச் செயல்பாடுகளில் இருந்து, மக்கள் திரள் கொலை ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஒரு உலகளாவிய போருக்கு முன்னேறும் ஒரு இயக்கத்தை – கலாச்சார மார்க்சியவாத ஒழுங்கை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட – சிலுவைப் போர் வீரர்கள் என்ற எதிர்கால அமைப்பிற்கான திட்டத்தை விவரிக்கிறது.

இந்த 1518 பக்க கொள்கை அறிக்கையில், குறிப்பிடத்தக்க 102 பக்கங்களில் இந்தியா இடம்பெறுகிறது. தனது சிலுவை வீரர்கள் அமைப்பானது "சனாதன கொள்கை இயக்கங்களையும் மற்றும் பொதுவாக ‘இந்துத்வா’-வாதிகளையும் ஆதரிக்கும்" என்று அதில் கூறுகிறான், பிரெய்விக். அந்த கொள்கை அறிக்கையின் 3.158-வது பிரிவில், "தங்களது ஐரோப்பிய சகோதரர்கள் சந்தித்து வரும் அதே அடக்குமுறை துன்பங்களை,  ‘இந்துத்வா’-வாதிகளும் இந்தியாவின் கலாச்சார மார்க்சியவாதிகளால் அனுபவித்து வருவதாக" விளக்கமளித்துள்ளான் அவன்.

"முஸ்லிம்களை தாஜா செய்தல்"

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, முஸ்லிம்களை தாஜா செய்வதிலும், கீழ்சாதி இந்துக்களை பொய் சொல்லியும், அச்சுறுத்தியும் சட்டவிரோதமாக மதமாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளையும், ஹிந்து நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் முழுமையாக அழிக்க விரும்பும் கம்யூனிஸ்டுகளையும் சார்ந்து இருக்கிறது (என்கிறான் பிரெய்விக்)..

வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் இந்தியாவில் நடப்பதை கழுகுப் பார்வையில் புரிந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் வாழும் இந்துக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை (என்பதும் அவன் வேதனை).

"இந்த அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத மற்றும் நிலைமை கைமீறிப்போகும்போது கலவரத்தில் ஈடுபட்டு முஸ்லிம்களைத் தாக்கும்" இந்துக் குழுக்களை பிரெய்விக்கின் கொள்கை அறிக்கை பாராட்டுகிறது. ஆனால் "இந்தச் செயல்பாடு உரிய பயன்களைத் தருவதில்லை" என்று கூறும் அவன், "முஸ்லிம்களைத் தாக்குவதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள வகை ஏ மற்றும் பி துரோகிகளை குறிவைக்க வேண்டும்; தீவிரவாதக் குழுக்களை உருவாக்க வேண்டும்; கலாச்சார மார்க்சிய அரசை தூக்கியெறிய சுறுசுறுப்பாக முயற்சி செய்ய வேண்டும்" என்கிறான்.

"இந்திய மற்றும் ஐரோப்பிய எதிர்ப்பியக்கங்கள் ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக் கொள்ள வேண்டும். நமது லட்சியங்கள் ஏறக்குறைய பொதுவானவை" (என ‘இந்துத்வா’-வாதிகளை பார்த்துக் கூறுகிறான்) பிரெய்விக்

இணைய தளங்களின் பட்டியல்

மேற்கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ள பார’தீய’ ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ், அகில பார’தீய’ வித்யார்த்தி பரிஷத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் இணைய தளங்களை பட்டியலிடுகிறான் பிரெய்விக்.

இந்திய உள்நாட்டுப் போரில் ‘இந்துத்வா’வாதிகளுக்கு ராணுவ ஆதரவு வழங்கவும், இந்தியாவில் இருந்து அனைத்து முஸ்லிம்களையும் நாடு கடத்தவும் அவனது கொள்கை அறிக்கை உறுதிபூணுகிறது. இது, அனைத்து மேற்குலக ஐரோப்பிய பனமுகக் கலாச்சார அரசுகளை தூக்கியெறிவது மற்றும் ஐரோப்பிய மண்ணி்ல் இருந்து அமெரிக்கா ராணுவத்தினரை வெளியேற்றுவது என்ற பரந்த திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவன் வரையறுக்கிறான்.

ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒன்றாக இந்தியாவைக் காண்கிறான். இங்கெல்லாம் தன்னுடைய வழித்தோன்றல்கள் போரை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறான்.

(ஆர்எஸ்எஸ்சின் வாய் என்று தூற்றப்பட்ட) வரலாற்றாய்வாளர்கள் கே.எஸ்.லால் மற்றும் சிறீநந்தன் வியாஸ் ஆகியோரின் நூல்களை மேற்கோள் காட்டி இஸ்லாமிய நெறியால் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல் என்கிறான், பிரெய்விக். கி.பி. 1000-1525 காலகட்டத்தில் லட்சக் கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதை அவர்களது நூல்கள் நிறுவுவதாக கூறுகிறான். (மோசடி ஆய்வாளர் என்று அஸ்கோ பர்போலா உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்களால் தூற்றப்பட்ட) என்.எஸ்.ராஜாராமையும் மேற்கோள் காட்டத் தவறவில்லை அவன்.

எதிர்காலத்தில் தன்னுடைய அமைப்பானது, "இந்து, புத்த, யூத பகுதிகளில் தேசியவாத இந்து, புத்த, யூத  மற்றும் (ஐரோப்பியர் அல்லாத) நாத்திக படைகளுடனான ராணுவ ஒத்துழைப்புக்கு பதக்கஙகளை வழங்கும்; இந்த முயற்சிகள் ஜிகாதி மற்றும் கலாச்சார மார்க்சிய படைகள், பணியாளர்கள் அல்லது நலன்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட வேண்டும்" என்று கனவு காணுகிறான் அவன்.

இந்த பதக்கங்களில், "இந்தியப் பகுதியில் இருந்து இஸ்லாமிய நெறியை விரட்டியடிப்பதற்கு இந்துத்வாவாதிகளுக்கு உதவியதற்காக" வழங்கப்படும் "இந்திய விடுதலை சேவை பதக்கமும்" அடக்கம்.

பிரெய்விக்கின் வீரர்கள் இந்துத்வாவாதிகளுடன் தோளோடு தோளாக இணைந்து போரிட்டாலும் கூட, (பிரெய்விக் கனவு காணும்) வலதுசாரிப் புரட்சிக்கு  பிந்தைய ஐரோப்பாவில் இந்துக்களின் உரிமைகள் வரம்பிடப்பட்டதாகவே இருக்கும். வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்-அல்லாதவர்களைக் கொண்டு வேலைக்கார (சூத்திர) வகுப்பு ஒன்று உருவாக்கப்படும். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ( 6 மாதம் அல்லது ஓராண்டு) ஐரோப்பா வரவழைக்கப்பட்டு, 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் அவரவர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஐரோப்பாவில் வேலை செய்யும் காலத்தில் பெரு நகரங்களில் முன்னரே வரையறுக்கப்பட்ட பகுதிகளில், ஒதுக்கப்பட்ட சமுதாயங்களாக வாழ்வார்கள் என்றும் தனது கொள்கை அறிக்கையில் கூறுகிறான், பிரெய்விக்.

 

"

 

இதைப் படித்து முடிக்கும் ஒருவர், சிந்தனை அளவில் பிரெய்விக், இந்துத்வா-வாதிகளோடு எவ்வளவு துல்லியமாக ஒத்துப்போகிறான் என வியக்காமல் இருக்க முடியாது. இங்கும் கூட ஆர்எஸ்எஸ் கனவு காணும் ராமராஜ்ஜியம் என்பது வர்ணாசிரம தர்மத்தின் வேறு பெயர்தான் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
இறுதியாக ஒன்று, நார்வே தாக்குதலை பிரெய்விக் தனியனாக நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் அவனது கூட்டாளிகள் சு.சுவாமியைப் போல உலகமெங்கும் விரவிக் கிடக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: