தொகுப்பு | ஜூலை, 2011

எடியூரப்பாவின் ஊழல்தான், ஆர்எஸ்எஸ்சின் அறநெறியா?

31 ஜூலை

YEDDY

ரு வழியாக, கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டார், எடியூரப்பா. அவர் ஒரு "ஊழல் பெருச்சாளி" என்பதில் பார’தீய’ ஜனதா கட்சியினர் உட்பட யாருக்கும் ஐயம் இருக்காது. (ஏனெனி்ல் தினமணி கூட எடியூரப்பாவை ஊழல் சுண்டெலி என்கிறது).

ஆர்எஸ்எஸ்-சில் எடியூரப்பா ஆற்றிய தீவிர செயல்பாடு, அவரை அதன் அரசியல் பிரிவான பார’தீய’ ஜனதாவிற்கு கொண்டுவந்தது.

1975-ல் சிமோகா முனிசிபல் கவுன்சிலர். 1994-ல் கர்நாடக சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரானார்.

2004 சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க, மதச்சார்பற்ற ஜனதா தளமும்-காங்கிரசும் கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்தக் கூட்டணி பாதியில் முறிய பார’தீய’ ஜனதாவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்தன. இதற்காக, இந்துத்துவா கொள்கையை வலியுறுத்தும் பார’தீய’ ஜனதாவோ, மதச்சார்பற்ற என்று பெயர் வைத்துக்கொண்டுள்ள தேவகவுடா கட்சியோ வெட்கப்படவில்லை. தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதலமைச்சராக, துணை முதலமைச்சரானார் எடியூரப்பா. இந்தக் கூட்டணியும் நீடிக்கவில்லை, சொன்னபடி, எடியூரப்பாவை முதலமைச்சராக விடவில்லை குமாரசாமி. இந்த நாடகத்தின் தொடர்ச்சியாக 2007 நவம்பரில் முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.

முதலமைச்சரான பின்னரும் அரை டவுசருடன் தோன்றி தான் ஒரு ஆர்எஸ்எஸ் அம்பி என்பதை காட்டிக்கொள்ள அவர் தவறியதில்லை. தென்னிந்தியாவின் முதல் பார’தீய’ ஜனதா அரசின் முதலமைச்சர் என்பதால், ஆளுநர் பரத்வாஜ் உள்பட பலரும் அவரை மிக தந்திரமாகக் காப்பாற்றி வந்தனர். என்ன செய்ய, பல ஆயிரம் கோடி ரூபாய் நாட்டு்க்கு இழப்பு ஏற்படுத்தியுடன், குடும்பத்தினர் சகிதமாக ஊழலில் ஈடுபட்டதாக லோக்அயுக்தா விசாரணை அறிக்கை குற்றம்சாட்டி விட்டதே? இதற்காக இல்லாவிட்டாலும் கர்நாடகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எடியூரப்பாவின் பதவியை பறிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பார’தீய’ ஜனதாவிற்கு! அப்புறம் மற்ற கட்சிகளின் குடைச்சலை சமாளிக்க வேண்டிய தேவையும் இருக்கிறதே.

சத்தியம் செய்வதாக சாமியையே ஏமாற்றிய எடியூரப்பா, தமது கட்சித் தலைமையையும் ஏமாற்ற முயற்சி செய்யாமலா இருந்திருப்பார்? எடியூரப்பாவிடம் இருந்து ஏன் பதவி விலகல் கடிதத்தை இன்னும் பெறவில்லை என்று,  பார’தீய’ ஜனதா தலைவரான நிதின் கட்கரியை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் காய்ச்சி எடுத்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த மோகன் பகவத் கடந்த ஜூன் மாதம் உதிர்த்த முத்து இது: "அறநெறிகளை கற்றுத் தந்து சமூக மாற்றத்தின் மூலமே ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இதற்கு அன்றாடம் ஆர்எஸ்எஸ் நடத்தும் ஷாகாவுக்கு செல்ல வேண்டும்" [The RSS believed that only through “social transformation” by teaching ethical values could corruption be tackled. a daily ‘shakha’ (RSS organised gathering) was the only way to bring about social transformation]

அன்றாடம் அரை டவுசர் அணிந்து ஷாகாவுக்கு போய் வளர்ந்த எடியூரப்பாவின் ஊழல்தான் இப்போது புழுத்து நாறுகிறது என்றால் ஆர்எஸ்எஸ்சின் அறநெறிகளைப் பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

பின்குறிப்பு: அலைக்கற்றை ஊழல் வெளிச்சத்திற்கு வந்தபோது நீதியின் வாளை எடுத்து ஆவேசமாக சுழற்றிய தினமணி, எடியூரப்பாவின் ஊழல் அம்பலமானவுடன் ஒரு தலையங்கம் எழுதியது. அதன் சாரம்: ஊழல் என்பது கடவுள் போல சர்வ வியாபகமாகிவிட்டது. எனவே எடியூரப்பாவி்ன் ஊழலைப் பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்பதுதான். இருப்பினும் பார’தீய’ ஜனதா தன்மானத்தை இழக்கத் தயங்காத கட்சி என்பதை தினமணி ஒப்புக் கொண்டதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

Advertisements